உக்ரைன் போரில் 30,000 வடகொரிய வீரர்களைக் களமிறக்க ரஷ்யா திட்டம் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!
உக்ரைனுடனான போரில் ஏற்பட்டுள்ள கடுமையான மனிதவளப் பற்றாக்குறையை ஈடுசெய்ய, கூடுதலாக 30,000 வடகொரிய ராணுவ வீரர்களைக் களமிறக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் தென்மேற்குப் பகுதியான வொரோனேஷ் பிராந்தியத்தில், புதிதாக வரவிருக்கும் 30,000 வடகொரிய வீரர்களைத் தங்க வைப்பதற்கான பிரம்மாண்ட முகாம் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உக்ரைன் உளவுத்துறை உறுதி செய்துள்ளது. முன்னதாக, ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் முன்னேற்றத்தைத் தடுக்க சுமார் 12,000 முதல் 14,000 வடகொரிய சிறப்புப் படை வீரர்கள் அனுப்பப்பட்டுப் போரில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் மட்டுமன்றி, உக்ரைன் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த வடகொரியா தயாரித்த புதிய பாலிஸ்டிக் ஏவுகணை லாஞ்சர்கள் மற்றும் போர்க்கருவிகளையும் ரஷ்யாவுக்குப் பியாங்யாங் வழங்கி வருகிறது.
ரஷ்யாவுடன் இணைந்து போர் புரிவதன் மூலம், வடகொரிய ராணுவம் நவீன ட்ரோன் தாக்குதல்கள், மின்னணு யுத்த முறைகள் மற்றும் அதிநவீன ஏவுகணைப் பயன்பாடுகளில் நேரடிப் போர்க்கள அனுபவத்தைப் பெறுகிறது. இது உக்ரைனுக்கு மட்டுமல்லாமல், வடகொரியாவின் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவெடுக்கும் எனக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
