"ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பிற்கு ஆதாரமில்லை" - அமெரிக்காவிற்கு ரஷ்யா பதில்!

 
ஈரான் அணு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரானின் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முறியடிக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி வருகிறது.

மாஸ்கோவில் புருனே நாட்டின் வெளியுறவு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் இது குறித்துத் தெரிவித்ததாவது: ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது என்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் ரஷ்யா இதுவரை காணவில்லை. அமெரிக்கா முன்வைக்கும் இந்தக் குற்றச்சாட்டு போரை நியாயப்படுத்துவதற்காகச் சொல்லப்படும் ஒரு காரணம் மட்டுமே.

அமெரிக்கா ரஷ்யா

ஈரான் மீதான இந்தத் தாக்குதல் ஒட்டுமொத்த அரபு நாடுகளின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வளைகுடா நாடுகள் தேவையற்ற உயிர்ச் சேதங்களையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்து வருகின்றன. இஸ்ரேல்-அமெரிக்கக் கூட்டணி ஈரானில் உள்ள ஆரம்பப்பள்ளி போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

அனைத்துத் தரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்திவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. முதற்கட்டமாகப் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களை நிறுத்த உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் லாவ்ரோவ் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்கா "ஈரான் அனைத்தையும் இழந்துவிட்டது" எனக் கூறும் நிலையில், ரஷ்யாவின் இந்த ஆதரவு அறிக்கை ஈரானுக்குச் சர்வதேச அளவில் ஒரு முக்கியத் துணையாகப் பார்க்கப்படுகிறது. எனினும், நான்கு நாட்களாகத் தொடரும் இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.