ரஷியாவில் பயங்கர விமான விபத்து! 😢 அணு ஆயுதம் ஏந்தும் திறன் கொண்ட விமானம் விழுந்ததில் 6 பேர் பலி

 
விமானம்

 

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அமூர் பிராந்தியத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த Tu-95 ரக குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட Tu-95 விமானம் செப்டம்பர் 29-ம் தேதி பயிற்சி விமானத்தின்போது அமூர் பிராந்தியத்தில் உள்ள மக்கள் வசிக்காத பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 7 பேர் இருந்ததாகவும், அவர்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

விபத்து நடந்த அமூர் பிராந்தியம் சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. க்ராஸ்னோயரோவோ கிராமம் அருகே, ஜெயா ஆற்றுப் பகுதியில் விமானம் விழுந்ததாக பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழாமல் இருக்க விமானிகள் முயன்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tu-95 என்பது சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட நீண்டதூர குண்டுவீச்சு விமானமாகும். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த விமானம், ரஷிய ராணுவத்தின் முக்கிய நீண்டதூர விமானங்களில் ஒன்றாக உள்ளது.

இதற்கிடையே, விபத்துக்குள்ளான விமானத்தில் அந்த நேரத்தில் எந்த ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இல்லை என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, இது அணு ஆயுத விபத்து அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.விமானம் எந்த காரணத்தால் விபத்துக்குள்ளானது என்பது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.