பதுங்கு குழியில் ரஷிய அதிபர்... பாதுகாப்பு காரணங்களால் புதின் எடுத்த அதிரடி முடிவு!

 
புதின் புதின்

உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ராணுவம் பதிலுக்குத் தாக்குதல் நடத்தி வருவதால், ஏற்படக்கூடிய ஆபத்துகளைத் தவிர்க்கப் புதின் தற்போது பதுங்கு குழியில் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அங்கிருந்தபடியே அவர் போருக்கான முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, உக்ரைனின் 'ஆபரேசன் ஸ்பைடர்வெப்' என்ற ரகசியத் திட்டம் மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாகப் புதின் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மாஸ்கோவில் உள்ள தனது வீடுகளிலோ அல்லது மற்ற முக்கிய இடங்களிலோ தங்குவதைத் தவிர்த்து வருகிறார். மேலும், அவருடன் பணியாற்றும் சமையல்காரர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும், அவர் முன்னிலையில் மொபைல் போன்களைப் பயன்படுத்தவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மத்தியில் நிலையைச் சீராகக் காட்ட, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காட்சிகளை அரசு ஊடகங்கள் வெளியிட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சி கவிழ்ப்பு முயற்சி அல்லது வான்வழித் தாக்குதல்கள் குறித்த அச்சமே புதினை இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்குத் தள்ளியுள்ளது. போர்க்கள நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் புதின், தனது பாதுகாப்பிற்காகத் தெற்கு ரஷியாவில் உள்ள ரகசியப் பதுங்கு குழிகளையே தற்போது தனது தங்குமிடமாக மாற்றிக்கொண்டுள்ளார்.