ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. கார்கீவ் நகரில் 11 பேர் பலி!
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரஷ்யப் படைகள் உக்ரைனின் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்துத் தீவிரத் தாக்குதலை முன்னெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, நேற்று உக்ரைனின் கார்கீவ் நகரில் உள்ள 5 மாடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மீது ரஷ்யாவின் சக்திவாய்ந்த ஏவுகணை நேரடியாகப் பாய்ந்து தாக்கியது. இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 16-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏவுகணை தாக்கியதில் அந்தக் குடியிருப்பின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து தரைமட்டமானது. மேலும் அதனைச் சுற்றியுள்ள 19-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் கார்கள் சேதமடைந்துள்ளன.
அபுதாபியில் நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் தடைபட்ட நிலையில், ரஷ்யா ஒரே இரவில் 29 ஏவுகணைகள் மற்றும் 480 ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் முழுவதும் பரவலாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உக்ரைன் வான் பாதுகாப்புப் படை 19 ஏவுகணைகளையும் 453 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியது. கார்கீவ் தாக்குதலுக்கு ரஷ்யா 'Izdeliye-30' எனப்படும் புதிய வகை குரூஸ் ஏவுகணையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது 1,500 கி.மீ தூரம் வரை சென்று துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.

இந்தத் தாக்குதலை "மிருகத்தனமானது" என்று வர்ணித்த உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கார்கீவ் நகரில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
