ரஷ்ய அதிபர் புதின் செப்.11-ல் இந்தியா வருகை - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

 
புதின்

இந்தியாவின் தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் வருகிற செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ரஷிய அதிபர் புதின், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடியைத் டெல்லியில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு தலைவர்களும் முதற்கட்டமாக பிரிக்ஸ் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்தும், அதனைத் தொடர்ந்து இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

புதின் மோடி

பிரதமர் மோடி - புதின் சந்திப்பின்போது வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகள் சார்ந்த கூட்டு நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்.யு.-57 ரக போர் விமானங்களை இந்தியா வாங்குவது தொடர்பாகவும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி புதின்

இந்தியாவின் தலைமையில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெறுகின்றன. மாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு முன்னதாக, செப்டம்பர் 11 அன்று அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதையொட்டி, டெல்லியில் ஜவகர்லால் நேரு மைதானம், ராஜ்காட், பாரத் மண்டபம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரப் பாதுகாப்பு மற்றும் ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.