சபரிமலை, மாளிகப்புரம் கோவில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு!

 
சபரிமலை மாளிகப்புரம் மேல்சாந்தி

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் பாரம்பரிய முறைப்படி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐப்பசி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டதுடன், இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. இதற்கிடையே, நடப்பு மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் முதல் ஒரு வருட காலத்திற்குச் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கு மேல்சாந்திகளைத் தேர்வு செய்வதற்காக ஏற்கனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் சபரிமலைக்கு ஐந்து பேரும், மாளிகப்புரத்திற்கு மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

சபரிமலை

இதற்கான இறுதித் தேர்வுச் சடங்கு இன்று காலை சன்னிதானத்தில் உஷா பூஜைக்குப் பிறகு நடைபெற்றது. சபரிமலையின் பாரம்பரிய வழக்கப்படி பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகளைத் தேர்வு செய்தனர். பந்தளம் அரண்மனையில் இருந்து இருமுடி கட்டி பதினெட்டாம் படி ஏறிச் சன்னிதானத்திற்கு வந்த இரு குழந்தைகள் இந்தத் குலுக்கல் முறையை மேற்கொண்டனர்.

சபரிமலை

இந்தக் குலுக்கல் முறையில் சபரிமலை ஐய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக அரிம்கர சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், மாளிகைப்புரத்து அம்மன் கோவில் புதிய மேல்சாந்தியாகத் தாமோதரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மேல்சாந்திகள் இருவரும், எதிர்வரும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலம் தொடங்க உள்ள வரும் நவம்பர் 16ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்பார்கள்.