ஓணம் வழிபாட்டிற்காக இன்று முதல் சபரிமலையில் நடை திறப்பு.. பக்தர்களுக்கு ஓண சத்யா விருந்து!
திருவோண பண்டிகைக் கொண்டாட்டங்களை முன்னிட்டு சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குத் திறக்கப்பட உள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, இன்று மாலை 5 மணிக்குத் தந்திரீ கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்து வைக்கிறார். நடை திறக்கப்பட்டதும் கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். அதனைத் தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணி முதல் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளன. ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு 10 மணிக்கு விசேஷ பூஜைகளுக்குப் பிறகு கோவில் நடை மீண்டும் அடைக்கப்படும்.

திருவோணத் திருநாளான ஆகஸ்ட் 26-ம் தேதி அன்று, சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களுக்குத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பாரம்பரிய 'ஓண சத்யா' (பிரமாண்ட விருந்து) வழங்கப்பட உள்ளது.
