இன்று சபரிமலையில் நடை திறப்பு.. வைகாசி மாத பூஜைக்காக குவியும் பக்தர்கள்!

 
சபரிமலை சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயில், வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு இன்று மாலை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்திலும் ஐந்து நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வைகாசி மாத வழிபாடுகளுக்காக இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இன்று மாலை சரியாக 5 மணிக்கு, சபரிமலை தர்மசாஸ்தா கோயிலின் நடை திறக்கப்பட உள்ளது. கோயில் தந்திரியான கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி கருவறை நடையைத் திறந்து வைத்து தீபங்கள் ஏற்றுவார். இதனைத் தொடர்ந்து, கோயிலின் முன்புறம் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். இன்றைய தினம் நடை திறப்பு மட்டுமே நடைபெறும் என்பதால், மற்ற விசேஷ பூஜைகள் ஏதும் இருக்காது.

சபரிமலை கூட்டம்

நாளை அதிகாலை முதல் வைகாசி மாதத்திற்கான வழக்கமான பூஜைகள் தொடங்கும். மே 15-ஆம் தேதி முதல் மே 19-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குக் கோயில் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, படி பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் மற்றும் லக்‌ஷார்ச்சனை போன்ற சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. வைகாசி மாத பூஜைகள் நிறைவடைந்த பிறகு, வரும் மே 19-ஆம் தேதி இரவு 10:00 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பக்தர்கள் வழக்கம் போல் கேரள காவல்துறையின் ஆன்லைன் போர்டல் வழியாக முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரலாம். ஆன்லைன் முன்பதிவு செய்யத் தவறியவர்களுக்காக நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 'உடனடி முன்பதிவு' வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சபரிமலை இருமுடி பெரிய பாதை நடைப்பயணம் யாத்திரை

வெப்பச்சலனம் காரணமாகக் கேரளா மற்றும் சபரிமலை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பம்பை முதல் சந்நிதானம் வரை செல்லும் பக்தர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற சரண கோஷம் முழங்க, வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது.