சபரிவர்மன் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் ஒப்புதல் - வீடியோ ஆய்வுக்குப் பின் முடிவு!

 
சபரிவர்மன்

நாகர்கோவில் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக இருந்தபோது உயிரிழந்த மாற்றுத்திறனாளி வாலிபர் சபரிவர்மனின் உடலைப் பெற்றுக்கொள்ள, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

முன்னதாகச் சிறையில் சபரிவர்மன் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது மரணத்திற்கு முறையான நீதி கோரியும், உடற்கூராய்வை வெளிப்படையாக நடத்தக் கோரியும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். உறவினர்களின் கோரிக்கையை ஏற்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சபரிவர்மனின் உடற்கூராய்வு நடைமுறைகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டன.

சபரிவர்மன் நாகர்கோவில் சிறை வார்டன்

இந்த உடற்கூராய்வு தொடர்பான வீடியோ பதிவுகளைச் சபரிவர்மனின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், உடற்கூராய்வு நடைமுறைகளிலோ அல்லது உடலிலோ சந்தேகத்திற்கிடமான எந்தவொரு அத்துமீறிய அம்சங்களும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்து கொண்டனர்.

சந்தேகங்கள் அனைத்தும் நீங்கியதைத் தொடர்ந்து, சபரிவர்மனின் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை நடத்த அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளனர்.

சபரிவர்மன் சபரி

இதனைத் தொடர்ந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முறைப்படியான ஆவணப் பணிகளை முடித்து, சபரிவர்மனின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒப்புதலால் கடந்த சில நாட்களாக நாகர்கோவிலில் நிலவி வந்த பரபரப்பு சற்றே தணிந்துள்ளது.