₹10 லட்சம் நிவாரணம், அரசு வேலையை ஏற்க சபரிவர்மன் மனைவி மறுப்பு - ஏமாற்றத்துடன் திரும்பிய அமைச்சர்கள்!

 
சபரிவர்மன் சபரி

நாகர்கோவில் சிறையில் கைதியாக இருந்த வியாபாரி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு அறிவித்த அரசு வேலை மற்றும் ₹10 லட்சம் நிதியுதவி நிவாரணத்தை அவரது மனைவி தற்போதைக்கு ஏற்க மறுத்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற வந்த தமிழக அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

உயிரிழந்த சபரிவர்மனின் உடலுக்குச் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவை, தங்களுக்குத் தெரிந்த மற்றும் நம்பிக்கையான மருத்துவர்கள் குழு மூலம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் வந்த பின்னரே, அரசின் அடுத்தகட்ட நிவாரணங்களை ஏற்பது குறித்து முடிவு எடுப்போம் என்று அவர்கள் அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

சபரிவர்மன் நாகர்கோவில் சிறை வார்டன்

சபரிவர்மனின் மரணம் சிறைக்குள் நடந்த திட்டமிட்ட படுகொலை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் இந்த வழக்கில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகத் முதற்கட்டமாகத் தவறிழைத்த 3 சிறை வார்டன்கள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து கொலையில் தொடர்புடைய சிறையிலிருந்த 8 கைதிகளும் இந்த வழக்கில் முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறை கைதி

சிறைத்துறையினரின் இந்தத் துரித கைது நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்தினர் தங்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை உடலைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது அரசின் சலுகைகளை ஏற்கவோ போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளதால் நாகர்கோவில் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.