சதுரகிரி மலையேற கோயிலுக்குச் செல்ல 4 நாட்கள் வனத்துறை சிறப்பு அனுமதி!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயிலுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட சில தினங்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வரிசையில் வரவிருக்கும் ஆனி அமாவாசை வழிபாட்டுத் திருநாளை முன்னிட்டு, வரும் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்குப் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முறைப்படி அனுமதி அளித்துள்ளது.

குறிப்பிட்ட நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். இறுதி நாளான ஜூலை 15 ஆம் தேதி மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இந்த நேர அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெகிழி போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை மலை மீது கொண்டு செல்லக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற உடனடியாகத் தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்மீக வழிபாட்டிற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைக் கோயிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பக்தர்கள் அனைவரும் வனத்துறையினரின் பாதுகாப்பு விதிகளுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
