பத்திரம் மக்களே... மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று நவம்பர் 19ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய அக்வான் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை நவம்பர் 20ம் தேதி நண்பகல் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

இந்நிலையில் இன்று நவம்பர் 19ம் தேதி தென் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும். நாளை நவம்பர் 20ம் தேதியும் மலைப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 21ஆம் தேதி வட கடலோர தமிழகத்திலும் லேசான மழை பெய்யக்கூடும்.
