கொரோனா தாக்கம் அதிகரிப்பு - பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உயிரிழப்புகளும் பதிவாகி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தையோ பதற்றத்தையோ அடைய வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
தீவிர காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படுகிறதா எனப் கவனிக்க வேண்டும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், சுய மருத்துவம் செய்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகித் தகுந்த ஆலோசனையையும் சிகிச்சையையும் பெற வேண்டும். தொற்று பரவலைத் தடுக்கவும், நம்மையும் நமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளவும் பின்வரும் நடைமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவது அவசியமாகும்.

பொது இடங்கள், பேருந்து, ரயில் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வெளியில் சென்று வீட்டிற்குத் திரும்பியவுடனும், உணவு அருந்துவதற்கு முன்பும் கைகளைச் சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு அடிக்கடி நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
பொது இடங்களில் பிறரிடமிருந்து போதிய சமூக இடைவெளியைப் பின்பற்றுவது தொற்று பரவாமல் தடுக்க உதவும். தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து, முறையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் கொரோனா பரவலை எளிதாகத் தடுக்க முடியும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
