குடிக்க தண்ணீர் கிடைக்கல... சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து பலி!

 
சஹாரா சஹாரா

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனப் பகுதியில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான விபத்து ஒன்று நடந்துள்ளது. மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு லாரி ஒன்றில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைக்கு அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணம் செய்த வாகனம் பழுதடைந்து பாலைவன மணலுக்குள் சிக்கிக் கொண்டது.

ஓட்டுநரும் பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தை மீட்க முடியாத நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த உணவு மற்றும் குடிநீரும் தீர்ந்து போனது. இதனால் மாற்று உதவியும் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தின் கொளுத்தும் வெயிலில் தாகத்தாலும் கடும் வெப்பத்தாலும் துடிதுடித்து 49 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இரண்டு பயணிகள் மட்டும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் பாலைவன மணலில் நடந்து சென்று ஒரு நீர்நிலையைக் கண்டுபிடித்து உயிரைக் காத்துக் கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் மீட்புப் பணிகள் நடத்தப்பட்டு, உயிரிழந்த 49 பேரின் உடல்களும் அங்கேயே ஒரு பொதுப் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.