‘சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்; தனுஷின் ‘அசுரன்’ படத்திற்கு 'வெக்கை' நாவல் மூலம் விதைத்தவர்!
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் மிக முக்கிய ஆளுமையுமான பூமணி நேற்றிரவு காலமானார். அவரது இந்த மறைவுச் செய்தி தமிழ் இலக்கிய உலகினரிடையே ஆழ்ந்த துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது கோவில்பட்டி இல்லத்தில் அவர் இயற்கை எய்தினார். மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதிச் சடங்குகள் இன்று ஜூலை 13, திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அவரது பாரதிநகர் இல்லத்தில் நடைபெறுகின்றன.

தமிழ் இலக்கிய உலகில் எளிய மக்களின் வாழ்வியலையும், கரிசல் மண்ணின் எதார்த்தங்களையும் தனது தனித்துவமான எழுத்து நடையால் பதிவு செய்தவர் பூமணி. இவர் எழுதிய நாவல்களில் மிக முக்கியமானதும், வாசகர்களால் கொண்டாடப்பட்டதுமான 'வெக்கை' நாவலைத் தழுவித் தான், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான 'அசுரன்' திரைப்படம் திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இலக்கிய உலகிற்கு இவர் ஆற்றிய அரிய பங்களிப்பிற்காக, கடந்த 2014-ஆம் ஆண்டில் இவரது 'அஞ்ஞாடி' நாவலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவரது மறைவையொட்டி தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்புகள் மற்றும் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
