"மனமகிழ் மன்றம்” பெயரில் மது விற்பனை - அரசுக்குக் கடும் நெருக்கடி!

 
மது மதுபானம் பீர் மது மதுபானம் பீர்

தமிழகத்தில் 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் எஃப்எல்-2 (FL-2) உரிமம் பெற்று, விதிகளுக்குப் புறம்பாகத் தனியார் பார்களைப் போல மது விற்பனை செய்யும் கூடங்கள் அதிகரித்து வருவது அரசுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கு விதிகளின்படி குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே மனமகிழ் மன்றங்களுக்கு மது விற்பனை செய்வதற்கான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் விக்னேஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.

மனமகிழ் மன்றம் மது பார்

தமிழகம் முழுவதும் தற்போது வரை மொத்தம் 863 எஃப்எல்-2 (FL-2) உரிமங்கள் மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த 863 இடங்களின் பின்னணியை ஆய்வு செய்ததில், பாரம்பரியமாக இயங்கி வரும் ஒரு சில முக்கியக் கிளப்களைத் தவிர, மற்ற பெரும்பான்மையான மனமகிழ் மன்றங்கள் தற்போது தங்களது சுயலாபத்திற்காகப் பொதுவான தனியார் பார்களைப் போல சட்டவிரோதமாக இயங்கி வருவது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசு பொறுப்பேற்றது முதலே மக்கள் குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த ஏராளமான டாஸ்மாக் கடைகளை அடையாளம் கண்டு மூடி உத்தரவிட்டது. ஆனால், அதே பகுதிகளில் 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் இயங்கும் இந்த மதுக்கூடங்கள் தடையின்றித் தொடர்ந்து மூடப்படாமல் இயங்கி வருவது ஏன் என்று பொதுமக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் தற்பொழுது தீவிரமாகக் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மது

இந்த விவகாரத்தில் எழுந்துள்ள கடும் புகார்களைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபடும் மனமகிழ் மன்றங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசு முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் விக்னேஷ், "விதிமீறலில் ஈடுபட்ட கிளப்களுக்குக் கடும் அபராதம் விதிப்பதா அல்லது அவற்றுக்கான உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதா என்பது குறித்து இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அரசு உரிய சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு இறுதி முடிவை எடுக்கும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.