சேலத்தில் சாயப்பட்டறையில் ரசாயன கசிவு! குடியிருப்புகளுக்குள் பரவி 50-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல்

 
மூச்சுத் திணறல்

 

சேலம் மாநகரில் சாயப்பட்டறையில் இருந்து திடீரென ரசாயனம் கசிந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவியதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாநகராட்சி 47-வது வார்டுக்கு உட்பட்ட குகை தெற்கு முனியப்பன் கோவில் தெருவில் பத்ரிநாதன் என்பவருக்கு சொந்தமான சாயப்பட்டறை செயல்பட்டு வருகிறது. இங்கு துணி நூல்களுக்கு சாயமிடும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் நூல்களுக்கு சாயமிடும் பணி நடைபெற்றபோது ரசாயனம் திடீரென கசியத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு முதலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக சாயப்பட்டறையில் இருந்து வெளியேறினர்.

சேலம்

சாயப்பட்டறையை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ள நிலையில், கசிந்த ரசாயனம் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாயப்பட்டறைக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ரசாயன கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே செவ்வாய்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சாயப்பட்டறையில் இருந்து ரசாயனம் கசிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும், அந்த சாயப்பட்டறை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் செயல்படுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், சாயப்பட்டறையில் இருந்து இதுபோன்று அடிக்கடி ரசாயன கசிவு ஏற்படுவதாகவும், இதனால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே செயல்படும் சாயப்பட்டறைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.