பெரும் சோகம்... ஜல்லிக்கட்டில் மாடு குத்தியதில் இளைஞர் பரிதாப பலி!

 
ஜல்லிக்கட்டு


 தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. பொங்கலை தொடர்ந்து பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்றுமுன்தினம் 9வது ஆண்டாக ஜல்லிக்கட்டு வளையக்காரனூர் காவேரி உயர் தொழில்நுட்ப பூங்கா முன்பு உள்ள மைதானத்தில் நடந்தது. ஜல்லிக்கட்டை தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகி ராஜசேகர் கலந்து கொண்டனர்.  

ஜல்லிக்கட்டு மாடுகள்


இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 540 காளைகள் கலந்து கொண்டன. சுமார் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒரு சுற்றுக்கு 80 வீரர்கள் வீதம் 5 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை துள்ளிப்பாய்ந்து மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில அடங்காத காளைகள் தன்னை அடக்க வந்த காளையர்களை ஆவேசமாக தூக்கி வீசின. அதேநேரம் சில முரட்டு காளைகளின் திமிலை பிடித்து வீரர்கள் அடக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசு, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், பீரோ, கட்டில், மெத்தை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

திருச்சி நவலூர் ஜல்லிக்கட்டு

கடைசி சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கியது.அப்போது சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் வசித்து வரும் 24 வயது  தாமஸ் ஆல்வா எடிசன் மாடுபிடி வீரராக களம் இறங்கினார். இவர் வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக வெளியே வந்த முரட்டு காளையை அடக்க முயற்சித்தார்.  அப்போது எதிர்பாராத விதமாக தாமஸ் ஆல்வா எடிசனின் தொண்டை பகுதியில் மாட்டின் கொம்பு குத்தி கிழித்ததில்  அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு  ஈரோடு அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டார். அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்  சிகிச்சை பலனின்றி தாமஸ் ஆல்வா எடிசன் பரிதாபமாக உயிரிழந்தார். காளை குத்தியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும்  அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web