நள்ளிரவில் பயங்கரம்... முதிய தம்பதியை அடித்துக் கொன்று நகைகள் கொள்ளை!

 
சேலம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியில் வசித்து வந்த முதிய தம்பதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராமன் மற்றும் அவரது மனைவி அமராவதி ஆகிய இருவரையும் மர்மநபர்கள் நள்ளிரவில் தாக்கி வீட்டிற்ள்ளேயே சடலமாக மாற்றியுள்ளனர். தம்பதியைக் கொடூரமாகத் தாக்கிய மர்மநபர்கள், அவர்கள் அணிந்திருந்த தங்கத் தோடு மற்றும் மூக்குத்தியை இரக்கமின்றிப் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். வழக்கம்போலக் காலையில் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆம்புலன்ஸ்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தம்பதியின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிரமான தடயங்களைச் சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தப்பியோடிய  மர்மநபர்களைப் பிடிப்பதற்காகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த முதியவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் உண்டாக்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் குற்றச் சம்பவங்களால் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஆழ்ந்து தவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கைச் சீர்செய்யக் காவல் துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைதியான கிராமப்புறப் பகுதியில் முதிய தம்பதியை நகைக்காக அடித்துக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.