40,000 தொழிலாளர்கள் போராட்டம்... சாம்சங் நிறுவனத்தில் வேலைநிறுத்த எச்சரிக்கை!

 
சாம்சங் சாம்சங்

 

உலகின் முன்னணி மின்னணு நிறுவனமான சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக நிர்வாகத்திற்கும் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. தென் கொரியாவில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள்  மே 21 ஆம் தேதி முதல் சுமார் 18 நாட்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் உலகளவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதனங்களின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற அச்சம் தொழில் துறையினரிடையே எழுந்துள்ளது.

சாம்சங் ஊழியர்கள்

தொழிலாளர்களின் இந்த முடிவைத் தடுக்கும் நோக்கில் சாம்சங் நிர்வாகம் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தொழிலாளர்கள் இத்தகைய போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாகப் போட்டி நிறுவனங்களுக்கு இணையான ஊதியம் மற்றும் லாபத்தில் பங்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று ஏப்ரல் 23 ஆம் தேதி பிரம்மாண்ட பேரணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ18000 வரை ஊதிய உயர்வு... சாம்சங் ஊழியர்கள் வரவேற்பு!  

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த வேலைநிறுத்தம் சாம்சங் நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த கோரிக்கைகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே இந்தப் போராட்டத்தின் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையே சுமூகமான தீர்வு எட்டப்படாவிட்டால், சாம்சங் தயாரிப்புகளின் விலையேற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.