திமுக ஆட்சியில் ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழல் புகார்... லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணை தீவிரம்!
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் செயல்பட்ட ஆற்று மணல் குவாரிகளில் பெருமளவில் விதிகள் மீறப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தனது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், தமிழகத்தில் உள்ள 28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் சுமார் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபி-க்கு விரிவான ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியிருந்தது.

அமலாக்கத்துறை தனது விசாரணையின் ஒரு பகுதியாக, கான்பூர் ஐஐடி தொழில் நுட்ப நிபுணர்களின் உதவியுடன் ஜியோ ஸ்கேனிங், ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டது.
அனுமதிக்கப்பட்ட 490 ஏக்கர் பரப்பளவைத் தாண்டி, சுமார் 2,450 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் விதிகளை மீறி ஆழமாக மணல் அள்ளப்பட்டிருப்பது தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கனரக இயந்திரங்களைச் சப்ளை செய்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ஜிபிஎஸ் மற்றும் ஜியோ-பென்சிங் தரவுகள் மூலமாக, இயந்திரங்கள் இயக்கப்பட்ட துல்லியமான நேரம் மற்றும் இடங்கள் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டு ஆதாரங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை வழங்கிய உறுதியான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது முதற்கட்ட விசாரணையை முன்னெடுத்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட முக்கிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மணல் கொள்ளை விவகாரத்தில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது மற்றும் இதற்குப் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் அதிகார மட்டங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
