ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி போராட்டிய தூய்மைப் பணியாளர்கள் கைது!
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை உரிமைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அமைப்பின் தலைமை: உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை பெரியமேடு பகுதியில் இப்போராட்டம் நடைபெற்றது.
"முதலமைச்சரை எங்களிடம் நேரில் வந்து பேசச் சொல்லுங்கள், நாங்கள் உடனடியாகப் போராட்டத்தைக் கைவிடுகிறோம்" எனப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் உரக்க முழக்கமிட்டனர்.
தொடர் முழக்கங்களை எழுப்பி போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அவசரப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் உழைப்போர் உரிமை இயக்கம் உள்ளிட்ட முக்கியச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில், சுமுகமான தீர்வு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
