குப்பையில் தவறி விழுந்த 5 சவரன் தங்கச் சங்கிலி - கண்டுபிடித்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர்களுக்கு மேயர் பாராட்டு!

 
துப்புரவு தூத்துக்குடி மேயர் செயின் துப்புரவு தூத்துக்குடி மேயர் செயின்

தவறுதலாகக் குப்பை வண்டியில் விழுந்துவிட்ட 5 சவரன் மதிப்பிலான தங்கச் சங்கிலியை, தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் கிளறித் தேடிக் கண்டுபிடித்து உரிய மூதாட்டியிடம் ஒப்படைத்த நேர்மையான செயலைத் பாராட்டித் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் வசித்து வருபவர் முத்துமாலை என்ற மூதாட்டி. இன்று காலை வழக்கம் போலத் தனது வீட்டின் தினசரி கழிவுகளைத் தூத்துக்குடி மாநகராட்சியின் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை சேகரிக்கும் வாகனத்தில் கொட்டியுள்ளார்.

குப்பைகளைக் கொட்டும்போது, மூதாட்டி முத்துமாலை தனது இடுப்புப் பகுதியில் சொருகி வைத்திருந்த சிறிய மணிபர்ஸ் எதிர்பாராதவிதமாக அவருக்கும் தெரியாமல் குப்பை வண்டிக்குள் விழுந்துள்ளது. அந்தப் பர்சிற்குள் சுமார் 5 சவரன் எடையுள்ள தங்கச் சங்கிலி பத்திரமாக வைக்கப்பட்டு இருந்துள்ளது.

குப்பை வண்டி அங்கிருந்து நகர்ந்த சில மணி நேரங்களுக்குப் பிறகே, தனது இடுப்பில் இருந்த மணிபர்ஸ் காணாமல் போனதையும், அது குப்பை வண்டியில் விழுந்திருக்கலாம் என்பதையும் மூதாட்டி உணர்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாகத் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களைத் தொடர்பு கொண்டு தட்டுத்தடுமாறி விபரத்தைக் கூறி அழுதுள்ளார்.

குப்பை தங்கச்சங்கிலி செயின் துப்புரவு

மூதாட்டியின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்த தூய்மைப் பணியாளர்கள், உடனடியாகத் தங்களது பணிகளை நிறுத்திவிட்டு மனிதாபிமானத்துடன் உதவ முன்வந்தனர். குப்பை வாகன ஓட்டுநரான இசக்கிராஜா மற்றும் தூய்மைப் பணியாளர்களான முனீஸ்வரி, ராணி, பொன்செல்வி ஆகியோர், அந்த வண்டியில் இருந்த ஒட்டுமொத்தக் குப்பைகளையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் கொட்டி, தங்களது கைகளால் அக்குப்பைகளை ஒவ்வொன்றாகக் கிளறித் தேடத் தொடங்கினர். கடுமையான துர்நாற்றத்திற்கு மத்தியிலும், விடாமுயற்சியோடு தேடிய அவர்களுக்கு, ஒருவழியாக மூதாட்டி தவறவிட்ட அந்த மணிபர்ஸ் பத்திரமாகக் கிடைத்துள்ளது. உள்ளே இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி அப்படியே இருந்ததை உறுதி செய்த பணியாளர்கள், அதனைத் தங்களது சுயநலத்திற்குப் பயன்படுத்த நினைக்காமல், உடனடியாக மூதாட்டி முத்துமாலையை வரவழைத்து அவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பர்ஸை பெற்றுக்கொண்ட மூதாட்டி, கண்ணீர் மல்கத் தூய்மைப் பணியாளர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

ஏழை எளிய தூய்மைப் பணியாளர்களின் இந்த அசாத்தியமான நேர்மை குறித்த தகவல், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியின் கவனத்திற்குச் சென்றது. உடனே அந்தப் பணியாளர்களைத் தனது அலுவலகத்திற்கு வரவழைத்த மேயர் ஜெகன் பெரியசாமி, அவர்களது நேர்மையான மற்றும் மனிதநேயமிக்கச் செயலை மனதாரப் பாராட்டி, அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சிறப்பு ஊக்கத்தொகையையும் (Incentive), வாழ்த்துச் சான்றிதழ்களையும் வழங்கிப் பெருமைப்படுத்தினார்.