தாக்கரே எம்.பி.க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி பேரம் – சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு.. மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு!

 
தாக்கரே தாக்கரே

மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு மிகப்பெரிய உள்கட்சிப் பிளவும், குதிரை பேரமும் அரங்கேறி வருவது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மக்களவை எம்.பி.க்களை விலைக்கு வாங்க தலா ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்  குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆளும் சிவசேனா பிரிவு, உத்தவ் தாக்கரேவின் எம்பிக்களை இழுக்க 'ஆபரேஷன் டைகர்' என்ற பெயரில் இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றி வருவதாக உத்தவ் தரப்பு குற்றம் சாட்டுகிறது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் ராவத், இந்த குதிரை பேரம் குறித்துப் பல அதிர வைக்கும் விவரங்களை வெளியிட்டுள்ளார்.

சிவசேனா கட்சியின் 6 மக்களவை எம்பிக்களை தங்கள் பக்கம் இழுக்க, தலா ரூ.50 கோடி தருவதாக ஆளும் தரப்பிலிருந்து பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, தலா ரூ.15 கோடி முன்பணமாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. டெல்லிக்குத் தனி விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அந்த எம்பிக்களுக்கு கூடுதலாக ரூ.10 கோடி கொடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் உள்ள ஒரு பாதுகாப்பான ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

துரோகம் இழைக்கத் துணிந்துள்ள அந்த எம்பிக்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் ஆளும் அரசு பலத்த போலீஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது என்று சஞ்சய் ராவத் சாடியுள்ளார். கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான அரவிந்த் சாவந்த், அனில் தேசாய் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து அவசரக் கடிதம் ஒன்றை அளித்துள்ளனர். சிவசேனா சின்னத்தில் போட்டியிட்டு வென்ற எம்பிக்கள் தன்னிச்சையாகப் பிரிந்து செல்வதையோ அல்லது ஆளும் பிரிவோடு இணைவதையோ சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கூடாது என அவர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், "மக்கள் வாக்குகளைப் பெற்று எம்பியாகி விட்டு, கட்சிக்குத் துரோகம் செய்ய நினைப்பவர்கள் தைரியமிருந்தால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்கட்டும்" என்றும் சஞ்சய் ராவத் சவால் விடுத்துள்ளார்.