சிக்மா படம் வெளியான பிறகே யோசிப்பேன்... மனம் திறந்த முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்!

 
சஞ்சய்

தமிழக முதலமைச்சரும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான விஜய்-சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தை  தொடங்கியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த ஆக்ஷன்-ஹீஸ்ட் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாவது குறித்து அவர் அண்மையில் மனம் திறந்துள்ளார். தனது சினிமா பிரவேசம் குறித்துப் பேசிய அவர், தான் சினிமாவில் நுழைவது குறித்துத் தனது பெற்றோர், தங்கை மற்றும் நண்பர்களிடம் பேசியபோது அவர்கள் அனைவரும் நேர்மறையாகப் பதிலளித்துத் தனக்குள் பெரிய எனர்ஜியை உருவாக்கினார்கள் என  தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய்

பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன்னை முன்பு ஹீரோவாக நடிக்க அணுகியது குறித்துப் பேசிய ஜேசன் சஞ்சய், அவர் அணுகியபோது சினிமாவில் கேரியரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எனக்குள் இருக்கும் திறமை என்ன, நான் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் எனக்குள் தேடல் இருந்ததால் அந்த  வாய்ப்பை ஏற்கும் நிலையில் நான் இல்லை எனத் தார்மீக விளக்கம் அளித்துள்ளார். தனது முதல் படம் காதல் கதையாக இல்லாமல், ஒரு பெரும் கேங்கைக் கொண்டு அட்வென்சர் ஹீஸ்ட் படமாக எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் தனக்குள் இருந்ததாகவும், இந்த கதைக்குத் தங்களின் முதல் சாய்ஸ் ஆக இருந்த நடிகர் சந்தீப் கிஷன் கதை பிடித்துப் போய் உடனடியாக   ஓகே சொல்லிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

சஞ்சய்

ரசிகர்கள் பலரும் ஜேசன் சஞ்சய்யைத் திரையில் எப்போது ஹீரோவாகப் பார்க்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் அவர் பேசியுள்ளார். எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பது உண்மைதான், படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களுக்குக் காட்சிகளை விவரிக்கும் போது அது வெளிப்படும் என ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் நடிப்புப் பக்கமாகத் தனது கவனத்தைச் செலுத்துவதைப் பற்றி, தற்பொழுது இயக்கி வரும் 'சிக்மா' திரைப்படம் திரைக்கு வந்த பிறகே  யோசிப்பேன் என்று சஞ்சய் மிகத் தெளிவாகத் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.