சங்கரன்கோவில் ஆடித்தபசு விழா - கோமதியம்மன் திருத்தேரில் எழுந்தருளல் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புகழ்பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலின் ஆடித்தவசு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்திருக்கோயிலின் ஆடித் திருவிழா கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழா நாட்களில் தினசரி கோமதி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் 9-ஆம் நாளான நேற்று காலை, சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

காலை 9.15 மணிக்குத் தொடங்கிய தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று 'அரோகரா' கோஷத்துடன் வடம் பிடித்துத் தேர் இழுத்தனர். நான்கு ரத வீதிகளையும் வலம் வந்த திருத்தேர், காலை 11.15 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆடித்தவசு திருவிழாவின் முக்கியச் சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி இன்று நடைபெறுகிறது: கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தெற்கு ரத வீதியில் உள்ள ஆடித்தபசு மண்டபத்திற்கு மதியம் 12 மணிக்கு எழுந்தருளல். மாலை 4.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்குப் புறப்பாடு. மாலை 6.05 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் வந்து கோமதி அம்பாளுக்குத் தபசு காட்சி அளித்தல். இரவு 11.00 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் வீதியுலா புறப்பாடு. இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாளுக்கு இரண்டாம் கட்டமாகத் தபசு காட்சி அளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
