கட்சியைக் கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார் சரத்குமார்!
சமத்துவ மக்கள் கட்சியை இன்று கலைத்து விட்டு, பாஜகவில் ஐக்கியமானார் நடிகர் சரத்குமார். “பெருந்தலைவர் காமராஜர் போல் மோடி ஆட்சி செய்கிறார் ” என்று சான்றளித்திருக்கிறார். மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், கூட்டணிக் குறித்தான பேச்சு வார்த்தைகள், யாருக்கு எந்த தொகுதி என்பது போன்ற விஷயங்கள் அரசியல் களத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் சரத்குமார் தலைமையில் இயங்கும் சமத்துவ மக்கள் கட்சி, கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.

ஆனால், இப்போது அதிமுகவும் பாஜகவும் தனித்தனை அணிகளாக இருப்பதால் சரத்குமார் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்தில் இருந்தார். இந்த நிலையில், முதல்கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பாஜகவுடன் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் சரத்குமார்.
தேர்தலில் தனக்கு சீட் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் பிரதமர் மோடி பிரதமராக வருவதற்காக 40 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்வேன்” என்று சொல்லி இருந்த சரத்குமார், இன்று அதிரடியாக தனது கட்சியை பாஜகவுடன் இணைத்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், ”மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வலிமையான பாஜகவுடனும் பிரதமர் மோடியுடனும் இணைந்து செயல்பட்டால் என்ன எனத் தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலையை அழைத்துக் கூறினேன். பெருந்தலைவர் காமராஜர் போல் ஆட்சி செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும். இது முடிவல்ல தொடக்கம் தான்” என்றார்.
