அமைச்சர் சரத்குமார் மீது புகார்... காவல் ஆணையரிடம் மனு!
தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக இணையத்தில் ஒரு காணொளி பரவியது. இதற்குப் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் தனது குழந்தைக்கு மாத்திரையை உடைத்து கொடுத்ததாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். ஆனால் இந்த விளக்கத்தை ஏற்காத எதிர்க்கட்சியான திமுக, அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியது.

அமைச்சரின் பதவியை பறிக்கக் கோரி திமுக இளைஞரணி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சென்னையில் எழும்பூர் பகுதியில் தடையை மீறிப் போராட முயன்ற திமுகவினரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அதிரடியாகக் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதுடன், அமைச்சருக்கு எதிரான அரசியல் எதிர்ப்புகளும் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரி புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் சரண்யா என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் நேரில் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
