நயினார் நாகேந்திரனின் வெற்றியைத் தடுத்த சசிகலா கட்சி? கடைசி நேரத் திருப்பம்!

 
சசிகலா சசிகலா

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலியிலிருந்து சாத்தூர் தொகுதிக்குத் தனது களத்தை மாற்றிய பாஜக-வின் நயினார் நாகேந்திரன், வெறும் 5,959 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். இந்தத் தோல்விக்குச் சசிகலா தலைமையிலான கட்சியின் வேட்பாளர் பிரித்த வாக்குகளே முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் நயினார் நாகேந்திரன் சில சுற்றுகளில் முன்னிலை வகித்தார். இறுதியில், திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் 62,060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நயினார் நாகேந்திரன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இத்தொகுதியில் சசிகலா தலைமையிலான கட்சியின் வேட்பாளர் இசக்கிராஜா 11,602 வாக்குகள் பெற்றுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் தோற்ற வித்தியாசம் சுமார் 6 ஆயிரம் வாக்குகள் மட்டுமே. ஆனால், இசக்கிராஜா பெற்ற வாக்குகள் அதைவிட இருமடங்கு அதிகம். வழக்கமாக பாஜக மற்றும் அதிமுக-விற்குச் செல்லக்கூடிய 'நடுநிலை' மற்றும் 'சமூக ரீதியான' வாக்குகளைச் சசிகலா கட்சி பெருமளவில் பிரித்துள்ளது. இந்த வாக்குகள் பிரிந்திருக்காவிட்டால், நயினார் நாகேந்திரன் எளிதாக வெற்றி பெற்றிருப்பார் எனத் தேர்தல் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மறுபுறம், முதன்முறையாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அஜித்தும் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளார். இது திமுக, பாஜக என இருதரப்பு வாக்குகளையும் பாதித்துள்ளது. இருப்பினும், பாஜக-வின் வெற்றிக் கனவைச் சசிகலா கட்சி சிதைத்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.