தமிழகத்தையே உலுங்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: நாளை இறுதித் தீர்ப்பு!

 
சாத்தான்குளம் தந்தை மகன் சாத்தான்குளம் தந்தை மகன்

தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டுகால நீண்ட விசாரணைக்குப் பிறகு நாளை மார்ச் 23ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் உயிரிழந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசார் மீதான தீர்ப்பு நாளை வெளியாகிறது. ஜூன் 2020-ல் ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரும் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து, அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாத்தான்குளம் பென்னிக்ஸ் ஜெயராஜ்

உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு சிபிஐ (CBI) வசமானது. அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்கள் உச்சநீதிமன்றம் வரை தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக, அந்தச் சமயத்தில் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ரேவதி, பியூலா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அளித்த சாட்சியங்கள் இந்த வழக்கில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

சாத்தான்குளம்

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்துள்ளன. இதையடுத்தே, மார்ச் 23-ஆம் தேதி (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.