சாத்தான்குளம் அருகே கோவிலில் திருட்டு: உண்டியல் பணத்துடன் சிசிடிவி பதிவுக் கருவியும் மாயம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீநெட்டுவான்கோட்டை ஹரிஹர சாஸ்தா கோவிலில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியல்களை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளைச் சேமிக்கும் டி.வி.ஆர். கருவியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆலங்கிணறு விலக்கு பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு பூஜை செய்யச் சென்ற தற்காலிக பூசாரி ராஜா, கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கோவில் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் ஐந்து கதவுகளும், மூன்று உண்டியல்களும் உடைக்கப்பட்டிருந்தன.
உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.2,000 திருடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. கோவில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.
