சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்கள் தடை...!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களுக்குச் செல்லும் மலைப்பாதையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சதுரகிரி மலைக்குச் செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை வனத்துறை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதனால் கோவிலுக்குச் செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பேயனாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ராக்காச்சி அம்மன் கோவில் ஓடை, செண்பகத்தோப்பு, வீரியன் கோவில் பகுதிகளிலும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளதால், அங்கு செல்வோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
