நான் திமுகவின் கட்டப்பா ... நடிகர் சத்யராஜ் பேச்சு!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் கணினி, தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி முடித்த 250 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பிரபல மூத்த நடிகர் சத்யராஜ் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தனர். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகப் பங்களிப்புகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

திமுக என்பது வெறும் தேர்தலில் பங்கேற்பதற்காகத் தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்றும், அது சமூகத் தொண்டு மற்றும் சமூகச் சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு பேரியக்கம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். சமூகத்தில் கீழ்நிலையில் இருக்கும் அடித்தட்டு மக்களை மேல்நிலைக்குக் கொண்டு வருவதுதான் இந்த இயக்கத்தின் மிக முக்கிய நோக்கம் என்று அவர் பேசினார். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவானது மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் என்றும், தற்போதைய புதிய ஆட்சியில் இருப்பவர்கள் திமுக வகுத்த பாதையில் செல்வதுதான் நாட்டிற்கு நல்லது என்றும் குறிப்பிட்டார்.
இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் நலனுக்காக எப்போதும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் என்றும், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் அதற்குத் தான் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார். தான் ஆளுங்கட்சியாக இருக்கும்போது மட்டும் அட்டையாக ஒட்டிக்கொள்பவன் அல்ல என்றும், தன்னைத் திமுகவின் கட்டப்பா என்று கூடச் சொல்லிக் கொள்ளுங்கள் என்றும் அவர் அலாதியான பாணியில் முழங்கினார். அவசரப்பட்டு மாற்றம் என்று சொல்லி ஓட்டுப் போட்டுவிட்டதாகவும், குழந்தைகள் மற்றும் நண்பா நண்பீஸ் எல்லாம் பெரியவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிவிட்டதாகவும் அவர் தனது பேச்சில் அரசியல் ரீதியாகச் சுட்டிக்காட்டினார்.
