சவுதியில் டிரக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: குமரியைச் சேர்ந்த 56 வயது நபர் உட்பட 2 பேர் பலி!
சவுதி அரேபியாவில் இரு டிரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள அபு ஹத்ரியா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சகாய ராஜ் செல்வ ஜெபமலை (56), வாலன் பெரப் ராஜ் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவர்கள் சென்ற டிரக் மீது எதிரே வந்த மற்றொரு டிரக் மோதியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த டிரக்கைப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த சவுதி காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு நாரியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களது உடல்களை சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் விபத்தில் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
