ஏமனில் சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்.. குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு!
ஏமனில் ஹவுதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் மற்றும் தலைநகர் சனா பகுதிகளில் சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஹவுதி அமைப்பு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏமன் நாட்டின் தலைநகர் சனா மற்றும் தைஸ் பகுதிகளில் இரவு நேரத்தில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், ஒரு குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்ததாக ஹவுதி அமைப்பின் சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சனாவின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து வெடிச்சத்தங்கள் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சவுதி ஆதரவு அரசுப் படைகளுக்கும் ஹவுதி அமைப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வலுத்து வரும் நிலையில் இத்தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
சவுதி அரேபியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஜாசன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஹவுதி அமைப்பு நடத்திய தாக்குதலில் நேபாளத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்ததாகச் சவுதி எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாகவே ஏமனில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சவுதி அரேபியாவின் எரிசக்தி மற்றும் நிதி மையங்களைக் குறிவைத்து ஹவுதிகள் நடத்தி வரும் தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக ஏமனில் மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதல்களும் இரு தரப்பு மோதலை மேலும் தீவிரப்படுத்தி, அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
