ஆயுதங்கள் இன்றி திணறும் சவுதி அரேபியா.. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல் - இந்தியர் பலி!
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது நடத்தி வரும் தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் அங்குப் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏவுகணைகளை வானிலேயே மறித்து அழிக்கும் தற்காப்பு ஏவுகணைகளின் இருப்பு குறைந்து வருவதால், சவுதி அரேபியா கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளது.
சவுதியின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்; 309 பேர் படுகாயமடைந்தனர்.

பயணிகள் முனையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட 2-வது ஏவுகணைத் தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது யூசுப் அலி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தத் தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
ஏமனில் இருந்து 500 மைல் தொலைவில் ரியாத் அமைந்திருந்தாலும், ஹவுதிகளின் தொடர் தாக்குதல்களை மறித்து அழிக்கும் 'பேட்ரியாட்' போன்ற தற்காப்பு ஏவுகணைகளின் இருப்பு சவுதியிடம் வேகமாகக் குறைந்து வருவதாக 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் விமான நிலையங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனச் சர்வதேச நிறுவனங்களுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
