சவுதி அரேபியாவில் இலங்கைத் தமிழர் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து - அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
சவுதி அரேபியாவில் இஸ்லாமிய மதக்கடவுள் மற்றும் இறைதூதர் குறித்துச் சமூக வலைதளத்தில் தவறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி, இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சர்வதேச அளவிலான தூதரக மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு, அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 27 வயதான அனோஜன் சிவராஜா என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர், சவுதி அரேபியாவில் தங்கிப் பணியாற்றி வந்தார். கடந்த ஜூன் மாதம் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் கோவிலுக்கு இந்து பக்தர்கள் பாத யாத்திரையாகச் சென்ற போது, ஒரு செல்லப்பிராணி நாய் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளது.

அந்த நாய் கோவில் அருகே சுற்றித் திரிந்த போது, வேறு மதத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அதனை அடித்து விரட்டி, அந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, இருதரப்பினரிடையே கடுமையான கருத்து மோதலாக உருவெடுத்தது. அப்போது, அந்தப் பதிவின் கருத்துப் பகுதியில் இந்து மதக்கடவுள் குறித்து ஆபாசமான கருத்துகள் தமிழில் பதிவிடப்பட்டன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அனோஜன் சிவராஜா இஸ்லாமிய மதக்கடவுள் மற்றும் இறைதூதர் குறித்துச் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தமிழில் பதிவிட்டார். பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து அந்தப் பதிவை நீக்கியதுடன், தனது செயலுக்கு பகிரங்க மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இருப்பினும், அனோஜன் தமிழில் பதிவிட்ட கருத்துகளைச் சிலர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அரபு மொழியில் மொழிபெயர்த்துச் சவுதி அரேபியாவில் அவர் பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அனுப்பினர். இது குறித்து அந்நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில், சவுதி அரேபியக் காவல்துறையினர் கடந்த ஜூலை மாதம் அனோஜனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சவுதி நீதிமன்றத்தில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேல்முறையீட்டு விசாரணையில், கடந்த செப்டம்பர் மாதம் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே, இலங்கையிலும் இந்தியாவிலும் அவருக்கு ஆதரவாகக் குரல்கள் வலுத்தன. இலங்கை அரசு உடனடியாகச் தலையிட்டுச் சவுதி அரேபிய அதிகாரிகளுடன் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன், சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக் குழுவைச் சவுதிக்கு அனுப்பி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.
இந்த மனுவை விரிவாக விசாரித்த சவுதி அரேபிய உச்ச நீதிமன்றம், அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைத் தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளது. இலங்கை அரசின் தொடர் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
இருப்பினும் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் முழுமையாக விடுதலை செய்யப்படுவாரா அல்லது அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறை தண்டனை தொடருமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனினும், மரண தண்டனையிலிருந்து விலக்கு கிடைத்துள்ளது அவரது உறவினர்களிடையே பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
