சவூதி அரேபியா கடலில் ஈரான் கொள்ளையர்கள் தாக்குதலில் சீர்காழி மீனவர் பலி... பெரும் சோகம்!
சவுதி அரேபியாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த சீர்காழி மீனவர் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தொடுவாய் காந்தி தெரு சுனாமி நகரைச் சேர்ந்த மாவீரன், கீழ மூவர் கரை மீன கிராமத்தைச் சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசல் மீனவ தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
சம்பவத்தன்று இவர்கள் நான்கு பேரும் கடலில் வழக்கம்போல் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென ஈரானிய கடற்கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அவர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் மாவீரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்ற மூன்று நபர்களும் மீட்கப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே கடும் அதிர்ச்சியையும் கண்ணீரையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், காயமடைந்தவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
