பிரிட்டிஷ் அரசுக்கு சாவர்க்கர் 10 முறை மன்னிப்பு கடிதம் எழுதினார் - நீதிமன்றத்தில் கொள்ளுப்பேரன் பரபரப்பு வாக்குமூலம்!!

 
சாவர்க்கர் சாவர்க்கர்
சாவர்க்கர்

சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் (வீர் சாவர்க்கர்) கொள்ளுப்பேரனான சத்யாகி சாவர்க்கர், பிரிட்டிஷ் அரசிடம் சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதியது தொடர்பாகப் புனே நீதிமன்றத்தில் அளித்துள்ள புதிய வாக்குமூலம் தற்போது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த காலங்களில் சாவர்க்கரின் செயல்பாடுகள் குறித்துப் பொதுவெளியில் விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாவர்க்கரின் கொள்ளுப்பேரனான சத்யாகி சாவர்க்கர் புனே நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் சாட்சியமளிப்பதற்காகச் சத்யாகி சாவர்க்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின் போது சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு 5 முறை மன்னிப்புக் கடிதங்களை எழுதினார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று புனே நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கின் தொடர் விசாரணையின் போது சத்யாகி சாவர்க்கர் தனது முந்தைய வாக்குமூலத்திலிருந்து மாறுபட்ட கூடுதல் விபரங்களைத் தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி மக்களவை நாடாளுமன்றம்

அவர் தனது புதிய வாக்குமூலத்தில், வரலாற்று ஆவணங்களின்படி சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கு மொத்தம் 10 முறை மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலேயே, சாவர்க்கரின் வாரிசே இந்தத் தகவலை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. 

மேலும், நீதிமன்றத்தில் சத்யாகி சாவர்க்கர் அளித்துள்ள வாக்குமூலத்தில் மற்றுமொரு முக்கியப் பதிவையும் செய்துள்ளார். இந்தியச் சுதந்திரப் போராட்டக் களத்தில் தீவிரமாகச் செயல்பட்ட மாவீரன் பகத் சிங் போன்ற மற்ற இளம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் எவரும், தங்களது சிறைவாசத்தின் போது பிரிட்டிஷ் அரசிடம் இது போன்று எவ்விதமான மன்னிப்புக் கடிதங்களையும் எழுதவில்லை என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். சாவர்க்கரின் கொள்ளுப்பேரன் அளித்துள்ள இந்த நீதிமன்ற வாக்குமூலம், சாவர்க்கர் குறித்த வரலாற்று விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.