பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களைக் காப்பாற்றுங்க... தனி ஹெல்ப்லைன் அமைக்கக் கோரி முதல்வர் விஜய்யிடம் மனு!

 
ஹெல்ப்லைன் புகார் முதல்வர் மனு ஹெல்ப்லைன் புகார் முதல்வர் மனு

பெண்களால் பல்வேறு குடும்பப் பிரச்சினைகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகும் ஆண்களைப் பாதுகாக்கும் பொருட்டுத் தனி ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அருள் துமிலன், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு விரிவான கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். குடும்ப அமைப்பிற்குள் ஆண்கள் எதிர்கொள்ளும் மறைமுகமான வன்முறைகள் குறித்து இந்த மனுவில் முக்கியத் தரவுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் அருள் துமிலன், கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் கடுமையான குடும்பப் பிரச்சினைகள் மற்றும் மன உளைச்சல் காரணமாகச் சுமார் 10,000 குடும்பத் தலைவர்கள் (ஆண்கள்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல்வர் விஜய்

குடும்ப வன்முறையாலும், சில பெண்களின் தவறான புகார்களாலும் பாதிக்கப்படும் ஆண்கள், தங்களுக்கு நேரும் அவலங்களைச் சமூகத்திற்கு வெளியில் சொல்ல முடியாமலும், யாரிடம் முறையிடுவது என்று தெரியாமலும் தவித்து வருகின்றனர். இதன் இறுதி வடிவமாகவே அவர்கள் தற்கொலை முடிவைத் தேடிக்கொள்கின்றனர்.

பாதிக்கப்படும் ஆண்களுக்கு முறையான வழிகாட்டுதல்களையும், மனநல ஆலோசனைகளையும் வழங்க அரசு ரீதியிலான கட்டமைப்பு தேவை என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் (UK), ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் பிரத்யேகமான அரசு உதவி எண்கள் (Helplines) வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன.

உல்லாசம் மனைவி காதலி கள்ளக்காதல் கொலை

அதே போன்றதொரு நவீனத் தனி ஹெல்ப்லைன் வசதியைத் தமிழகத்திலும் உடனடியாக உருவாக்க வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்படும் ஆண்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். பெண்களின் பாதுகாப்புக்குச் சட்டங்களும், உதவி எண்களும் இருப்பது போல, குடும்பப் பிரச்சினைகளால் தவிக்கும் ஆண்களின் குறைகளைக் கேட்கவும் ஒரு தனிப் பிரிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் அமைத்துத் தர வேண்டும் என அந்த மனுவில் அருள் துமிலன் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டுள்ளார்.