ஆயிரத்தில் அல்ல கோடானு கோடிகளில் ஒருத்தி சாவித்திரி நினைவலைகள்....!

 
ஆயிரத்தில் ஒருத்தி நடிகையர் திலகம் சாவித்திரி!!

தமிழ் திரையுலகில் நவரசங்களையும் கண்ணசைவில் காண்பித்து உதட்டசைவில் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி. சாவித்திரி 1935 டிசம்பர் 6 ம் தேதி குண்டூர் சிறாவூரில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மாவுக்கு மகளாக பிறந்தார். மிகச் சிறிய வயதிலேயே இசை, நடனம் பயின்று மேடைகளில் நடித்து வந்தார். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் 318 படங்களில் தனி முத்திரை பதித்தவர்.

ஆயிரத்தில் ஒருத்தி நடிகையர் திலகம் சாவித்திரி!!


இவருடைய ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு முத்திரை என்ற போதிலும் இன்று வரை ரசிகர்களின் நெஞ்சில் தலைமுறை தாண்டியும் இடம் பெற்றிருப்பது பாசமலர் . தமிழ் சினிமாவில் இன்று வரை அண்ணன் தங்கை பாசத்தை முன்னிறுத்தி எத்தனையோ திரைப்படங்கள் வந்து விட்டன. இருந்த போதிலும் 1961ல் வெளியான ‘பாசமலர்’ திரைப்படத்திற்கு நிகர் எதுவுமில்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இப்படத்தில் சிவாஜியும், சாவித்திரியும் நடிக்காமல் உணர்வுப் பூர்வமாகவே வாழ்ந்திருப்பர்.


12 வயதில் சினிமா சான்ஸ் தேடிய போது முதன் முதலாக ஜெமினியை சந்தித்தார் சாவித்திரி. 1952ல் தமது 16 வயதில் , 32 வயது ஜெமினியோடு பழக ஆரம்பித்தார். ஜெமினிக்கு ஏற்கனவே பாப்ஜி, புஷ்பவள்ளி இருவருடன் மணவாழ்க்கை நடத்திய நிலையில் ஜெமினியின் மூன்றாவது தேர்வாக சாவித்திரி இருந்தார். இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.


கை கொடுத்த தெய்வம் படத்தில் சிவாஜி அவரை வியந்து பாடுவது போல் கண்ணதாசன் பாட்டு எழுதியிருந்தார்.
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ,
உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ-இந்த பாட்டு வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் சாவித்திரி. தெலுங்குப் பெண்ணான சாவித்திரியின் தமிழ் உச்சரிப்பு அலாதியானது. சகோதரி சாவித்திரியுடன் நடிக்கும்போது, நான் சற்று எச்சரிக்கையாகத்தான் நடிப்பேன். நாங்கள் இருவரும் நடிக்கும் காட்சிகளில் நிச்சயமாக நடிப்புப் போட்டி இருக்கும் என பதிவு செய்கிறார் நடிகர் திலகம் சிவாஜி.

1969 ல் ஜெமினியும், சாவித்திரியும் பிரிந்தனர். ஜெமினியைப் பிரிந்திருந்த காலத்தில், சந்திரபாபுவின் தோழமை சாவித்திரிக்கு ஆறுதல் அளித்தது. இருவருமே படம் எடுத்து, நஷ்டப்பட்டனர்.வாரி, வாரிக் கொடுத்த சாவித்திரி வீடு, வாசல் அனைத்தையும் இழந்து, வறுமையின் பிடியில் தவித்தார். வறுமை நிலையில் கூட ரசிகரின் அவசரத் தேவைக்காக, தான் பெற்ற ஷீல்டுகளை சேட்டு கடையில் விற்று ரூ.10000 தந்ததாகட்டும், தனது விலை உயர்ந்த பட்டுச் சேலையை விற்று, டிரைவரின் மகள் திருமணத்துக்கு உதவியது அத்தனையும் சாவித்திரியை வள்ளல் என்று சொன்னால் மிகையாகாது.

ஆயிரத்தில் ஒருத்தி நடிகையர் திலகம் சாவித்திரி!!


இவருக்கு உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் இருந்தன. 19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி தன்னுடைய 45 வது வயதில் 1981 டிசம்பர் 26ம் நாள் உயிரிழந்தார். இந்திய அரசு 2011ல் நினைவு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டது.


சாவித்திரி மறைந்த நாளில் கேமராவிற்கென்றே வடித்த முகம் ஒன்று என்றால் அது சாவித்திரியின் முகம் தான் என பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் சிவசங்கரி. சாவித்திரி ஆயிரத்தில் அல்ல, ‘கோடானு கோடிகளில் ஒருத்தி’ என வரலாறு மிக அழுத்தமாகப் பதிவு செய்து கொண்டது.

From around the web