தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சவுக்கு சங்கருக்கு 3 நாட்கள் பரோல்! பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெங்களூரு பயணம்!
பிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, அவரது தாயார் கமலாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்னை காவல்துறை 3 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
சவுக்கு சங்கரின் தாயார் ஏ. கமலா, வயது மூப்பு மற்றும் தொடர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று பெங்களூருவில் காலமானார். தனது மகனின் சட்டப் போராட்டங்களில் உறுதுணையாக இருந்த அவர், சங்கருக்கு மருத்துவக் காரணங்களுக்காகப் பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தாயாரின் மறைவுச் செய்தியைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதி கோரி சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் சிறைத்துறை மற்றும் காவல்துறையிடம் மனு அளித்தனர். இதனைப் பரிசீலித்த சென்னை மாநகரக் காவல் ஆணையர், மனிதாபிமான அடிப்படையில் 3 நாட்கள் தற்காலிக பரோல் வழங்கி உத்தரவிட்டார். ஏப்ரல் 13ம் தேதி இரவு 8 மணி முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு 8 மணி வரை பரோல் வழங்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் பெங்களூருவில் உள்ள ஓசூர் மெயின் ரோடு பகுதியில் நடைபெறும் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார். பரோல் காலம் முடிந்தவுடன் மீண்டும் புழல் சிறையில் அவர் ஒப்படைக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நிலுவையில் இருந்த மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் வழங்கப்பட்ட இடைக்காலப் பிணை நிபந்தனைகளை மீறியதாகச் சவுக்கு சங்கர் மீது புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த அவர், கடந்த வாரம் ஆந்திராவில் வைத்துத் தமிழகத் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சவுக்கு சங்கரின் தாயார் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக வலைதள ஆர்வலர்கள் தங்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
