மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித்தொகை - தொகுதிக்கு ஒரு கலைக் கல்லூரி - ராமதாஸ் தேர்தல் அறிக்கை!
இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள 101 பக்க தேர்தல் அறிக்கையில், மாணவர்களின் இடைநிற்றலைத் தடுத்து உயர்கல்வியை உறுதி செய்யப் பல்வேறு நிதிசார்ந்த சலுகைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேல்நிலைப்பள்ளி (11 மற்றும் 12-ஆம் வகுப்பு) பயிலும் மாணவர்களுக்குக் கல்வி இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டு, மாதம் ரூ.2,000 உதவித்தொகை நேரடியாக வழங்கப்படும். பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் அவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பிரத்யேக உதவித்தொகைத் திட்டம் அமல்படுத்தப்படும். ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதாரக் காரணங்களால் படிப்பைப் பாதியில் நிறுத்துவதைத் தடுக்க இந்த நிதி உதவி பெரும் பக்கபலமாக இருக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஒரு ஐ.டி.ஐ கட்டாயம் தொடங்கப்படும். இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்விக்காக நீண்ட தூரம் பயணம் செய்வது தவிர்க்கப்படும்.
கல்லூரி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை முழுமையான மருத்துவப் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும். மாணவர்களின் மருத்துவக் குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விபரங்களை உள்ளடக்கிய பிரத்யேக 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். அவசரக் காலங்களில் இந்தத் தரவுகள் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதோடு, மாணவர்கள் மத்தியில் தொழிற்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகப் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்பதும் பாமகவின் முக்கிய வாக்குறுதியாக உள்ளது. "கல்வி என்பது வியாபாரம் அல்ல, அது ஒரு சேவை" என்ற தாரக மந்திரத்துடன் இந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
