அணையின் தூண்களுக்கு இடையே உயிரைப் பணயம் வைத்து பள்ளிக்குச் செல்லும் பிஞ்சுக் குழந்தைகள்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
மாணவர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கல்வி கற்கச் செல்லும் பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காகத் தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் பேரதிர்ச்சி தரும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அணையின் பிரம்மாண்டமான தூண்களுக்கு இடையே ஆபத்தான முறையில் தாண்டித் தாண்டிச் சென்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ வெளியாகி நாட்டின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியைக் குறித்துப் பெருமைப்படும் அதே வேளையில், கிராமப்புறக் குழந்தைகளின் அடிப்படைக் கல்விக்கே இத்தகைய ஆபத்தான சூழல் நிலவுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில் சீருடை அணிந்த சிறிய குழந்தைகள் தங்கள் முதுகுப் பைகளுடன் ஆழமான நீரைக் கொண்ட அணையின் தூண்களுக்கு மேலே கவனமாகச் செல்வதைக் காண முடிகிறது. சற்றே கால் பிசகினாலும் ஆழமான நீரில் விழுந்து உயிர் பிழைப்பதே அரிதாகிவிடும் என்ற சூழலில், அச்சமின்றிப் பழகிப்போன முகங்களோடு அந்தச் சிறுவர்கள் கடந்து செல்லும் காட்சி காண்போரின் நெஞ்சைப் பதற வைக்கிறது.

மழைக்காலங்களில் ஆற்று வெள்ளம் அதிகரிக்கும் வேளையில், கிராமத்திற்கும் பள்ளிக்கும் இடையே பாதுகாப்பான பாலமோ அல்லது போக்குவரத்து வசதியோ இல்லாததால் குழந்தைகள் மரணத்தோடு போராடிப் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது.இந்தக் கொடூரமான காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நடந்து ஒரு உயிர் பிரிந்த பிறகே அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா என்றும், உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பான மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.