பள்ளி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் கல்வி சாராத நிகழ்வுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குப் பள்ளிக்கல்வித்துறை மீண்டும் திட்டவட்டமான தடையை விதித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்றல் சூழலை முழுமையாக உறுதி செய்யும் வகையில் பள்ளிக் கல்வி இயக்குநர் சார்பில் இந்தக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'பள்ளிகளைச் சீரமைப்போம்' என்ற முன்னெடுப்பின் கீழ், பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று முக்கியச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பள்ளி வளாகங்களை எந்த ஒரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கோ, கொண்டாட்டங்களுக்கோ அல்லது அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கோ ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி சார்ந்த நிகழ்வுகளைத் தவிர, வெளிநபர்கள் பங்கேற்கும் கல்வி அல்லாத பிற நிகழ்ச்சிகள், விழாக்கள் ஆகியவற்றைப் பள்ளி வளாகங்களுக்குள் நடத்தக் கூடாது எனக் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகள் என்பது மாணவர்கள் பயிலும் புனிதமான கல்விக்கூடங்களாக மட்டுமே திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இத்தடை மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களுக்குள் வெளிநபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் தலையீடு இருப்பதால் மாணவர்களின் பாதுகாப்பிற்கும், அன்றாடக் கற்றல் நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதமும் இது தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சில இடங்களில் விதிமீறல்கள் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதனைக் கண்டிப்புடன் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
