பாலியல் துன்புறுத்தல் புகாரில் பள்ளி நிர்வாகம் விசாரிக்க கூடாது... பள்ளிகளுக்கு புதிய நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!
பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்துப் பள்ளி நிர்வாகமே நேரடியாக விசாரணை நடத்தக் கூடாது என்றும், உடனடியாகக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கையாள்வதற்காகக் கண்டிப்பாக ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட வேண்டும். இந்தக் குழுவில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஏதேனும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள், பள்ளி நிர்வாகம் தங்களே முன்வந்து எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, அத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாகத் தொடர்புடைய காவல்துறையிடம் புகார் அளித்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பள்ளி வளாகத்திற்கு விசாரணைக்கு வரும் காவல்துறையினர் சீருடை அணியாமல் வருவதுடன், விசாரணை நடவடிக்கைகளின்போது மாணவர்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமல் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
