1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதிய 9-ம் வகுப்பு மாணவர்! ‘மிரர் ரைட்டிங்’ சாதனை

 
திருக்குறள்

 

கரூர் மாவட்டம் கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் சுதர்சன் என்ற மாணவர், 1330 திருக்குறளையும் ‘மிரர் ரைட்டிங்’ முறையில் எழுதி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.பொதுவாக நாம் எழுதும் எழுத்துக்கள் நேரடியாக இருக்கும். ஆனால் ‘மிரர் ரைட்டிங்’ எனப்படும் கண்ணாடி எழுத்து முறையில், எழுத்துக்களை தலைகீழாகவும் எதிர்திசையிலும் எழுத வேண்டும். இவ்வாறு எழுதப்பட்டதை கண்ணாடியில் பார்த்தால் மட்டுமே வழக்கமான எழுத்து வடிவில் படிக்க முடியும்.

என்ன ஒரு திறமை! 1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதி அசத்திய அரசுப் பள்ளி மாணவர்!/What a talent! A government school student who wrote 1330 Thirukkurals upside down!

இந்த கடினமான எழுத்து முறையை பயன்படுத்தி, திருவள்ளுவரின் 1330 திருக்குறள்களையும் சுதர்சன் முழுமையாக எழுதியுள்ளார். குறிப்பாக, அனைத்து திருக்குறள்களையும் ஒரே வாரத்திற்குள் எழுதி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.சுதர்சனின் இந்த முயற்சிக்கு அவரது தாயாரின் வழிகாட்டுதலும் ஊக்கமும் முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. தாயாரின் வழிகாட்டுதலுடன் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட மாணவர், மிரர் ரைட்டிங் முறையில் திருக்குறள்களை எழுதும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

1330 திருக்குறள்களையும் இத்தகைய வித்தியாசமான முறையில் எழுதிய மாணவரின் திறமையை அறிந்த பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.தமிழ் மொழியின் சிறப்பையும் திருக்குறளின் பெருமையையும் வெளிப்படுத்தும் வகையில், மாணவர் சுதர்சன் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. படிப்புடன் சேர்த்து வித்தியாசமான திறமைகளை வளர்த்துக் கொள்ளும் மாணவர்களுக்கு சுதர்சனின் முயற்சி ஊக்கமளிப்பதாகவும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.