மலை மீதேறி பள்ளி மாணவர்கள் தற்கொலை மிரட்டல் போராட்டம் - கல்குவாரிக்கு எதிர்ப்பு!

 
மணப்பாறை கல்குவாரி மலை குன்று மாணவர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் ஊராட்சி ரெட்டமலைப்பட்டியில் தனியார் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. தற்போது அக்குவாரியில் எம்.சாண்ட் கிரஸர் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இங்கு கிரஸர் தொடங்கப்பட்டால் இனாம்கோவில்பட்டி, அ.தோப்புப்பட்டி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் காற்று மாசு, சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி கிராம மக்கள் அரசு உயர் அதிகாரிகளிடம் பலகட்ட மனுக்களை அளித்துள்ளனர். இருப்பினும் கிரஸர் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இதற்கிடையே, இப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தச் சென்னை சென்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்திக்கச் சென்றபோது அவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்களுக்காக, நேற்று பள்ளி மாணவர்கள் 4 பேர் அருகிலுள்ள ரெட்டைமலை கரட்டில் ஏறிப் பாறையின் மீது அமர்ந்து, குதித்து விடுவதாகக் கூறித் தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.