ஜூன் 1ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறப்பு... முதலமைச்சர் விஜய் ஆலோசனையின் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்பே அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக நீடித்து வந்தது. இதன் காரணமாகப் பள்ளி திறக்கப்படும் நாள் மேலும் சில வாரங்களுக்குத் தள்ளிப் போகக்கூடும் என்று இணையதளப் பக்கங்களில் சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகிப் பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தின.

இந்தச் சூழலில், பள்ளிகள் திறப்பு மற்றும் நாளை மறுநாள் வெளியாகவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஜூன் 1 முதல் 3-ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கான புதிய பாடப்புத்தகப் பயிற்சிகள் தடையின்றி நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. கோடை வெயில் நிலவினாலும் மாணவர்களின் கல்விப் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
